மும்பையின் லோயர் பரேல் என்ற பகுதியில் 55 வயதான பெண் மற்றும் அவரது நண்பர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு என்று விஐபி கூடாரங்களை முன்பதிவு செய்வதற்காக, இணையதளத்தில் பார்த்த போது tentcitymahakumbh என்ற தளத்தை பார்த்து உள்ளனர். கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி அன்று அதில் கொடுக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு அழைத்த போது தவறான நபரை தொடர்பு கொண்டதாக தெரிவித்தனர்.

அரை மணி நேரத்திற்கு பிறகு அவரது செல்போனுக்கு, வேறொரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அந்த நபர் வாட்ஸ்அப்பில் கூடாரங்களை பற்றிய விவரங்களை அனுப்பினார். மேலும் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட தகவலையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் ‘UP State Tourism II’ என்ற பெயரில் வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி, முதலில் 35 ஆயிரம் செலுத்துமாறு கேட்டுள்ளார்.

அதை செலுத்திய பிறகு, மறுநாள் மீண்டும் அவர் அழைத்து தள்ளுபடி விலையில் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யலாம் என்று கூறியுள்ளார். அப்போது அந்தப் பெண் மற்றும் அவரது நண்பர், தங்களுக்கு 6 டிக்கெட்டுகள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர் 2,61,990 செலுத்த வேண்டும் என்று கூறினார். அதையும் அவர்கள் செலுத்தியுள்ளனர். இதையடுத்து பிப்ரவரி 10ஆம் தேதி அன்று மீண்டும் அந்த நபர் அழைத்து, தாமதமாக பணம் செலுத்தியதால், இன்னும் 93 ஆயிரம் செலுத்தினால் மட்டுமே விமான டிக்கெட் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த தொகையையும் அவர்கள் செலுத்தியுள்ளனர். அதன் பிறகு அவர்களுக்கு விமான டிக்கெட்டும் கிடைக்கவில்லை, அந்த நபரிடமிருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. இதனால் தாங்கள்  மோசடியில் சிக்கியதை உணர்ந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டவர் பயன்படுத்திய வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணைக் கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.