ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு குமிலன்பரப்பு பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மோகன் திலீப்(23) பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரும் பி.காம் பட்டதாரியான வெள்ளைபாறை பகுதியைச் சேர்ந்த கௌசல்யா(20) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த கௌசல்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் கடந்த 27-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து புதுமண தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து மோகன் திலீப் கூறியதாவது, நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் கௌசல்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் பாதுகாப்பு கேட்டு சித்தோடு பவானி காவல் நிலையங்களுக்கு சென்றோம். ஆனால் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தவில்லை. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தோம் என கூறினார்.