கேரளாவின் ஆலப்புழை மாவட்டம் சேர்த்தலை பகுதியைச் சேர்ந்த 65 வயது ரமேசன் தனியார் மருத்துவமனையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். முந்தைய திருமணம் முறிந்து தனியாக வசித்து வந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 55 வயது ஓமனாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, முதுமையில் திடீர் காதல் மலர்ந்தது.

தனிமையை போக்க இணைந்து வாழலாம் என முடிவெடுத்த இருவரும் உறவினர்களிடம் தெரிவிக்க, அவர்களும் வயதான காலத்தில் இனிமை சேர்க்கட்டும் என சம்மதம் தெரிவித்தனர். ஊரறிய திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கடந்த 15-ம் தேதி சைக்கிளில் சென்ற ரமேசன் மோட்டார்சைக்கிள் மோதி காலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருமணத்தை தள்ளிவைக்க உறவினர்கள் முடிவு செய்த போதிலும், ஏற்பாடுகள் முடிந்துவிட்ட நிலையில், இருவரும் நிச்சயித்த தேதியிலேயே திருமணம் செய்ய விரும்பினர்.

ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்த ரமேசனை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தனர். மணக்கோலத்தில் உறவினர்களுடன் வந்த ஓமனா முன்பு, ரமேசன் தாலி கட்டி மாலை மாற்றினார். உறவினர்கள் மலர் தூவி வாழ்த்த, முன்னாள் எம்.பி. ஏ.எம். ஆரிப் கலந்துகொண்டு ஆசீர்வாதம் செய்தார்.

திருமணம் முடிந்த உடனேயே காயமடைந்த கணவரை ஓமனா கவனிக்க தொடங்கினார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றாலும், காதலுக்கு வயதில்லை என நிரூபித்த இந்த ஜோடியின் துணிச்சல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி, சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளது!