
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
அதனால் சிறுமியை மீட்டு தரக்கோரி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வயப்பட்ட சிறுமி வீட்டை விட்டு வெளியேறி அந்த இளைஞருடன் சென்றுள்ளார் என தெரியவந்தது.
இதனை அடுத்து, 18 வயது பூர்த்தி அடையாத நிலையில் பெற்றோருடன் சிறுமியை காவல்துறையினர் அனுப்ப முயற்சித்தனர். ஆனால் சிறுமி பெற்றோருடன் செல்ல மறுத்ததால் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதன் பின் கடந்த மே 22 ஆம் தேதி அந்த சிறுமியை சமாதானம் செய்து பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் காதலருடன் சேரவிடாமல் தடுத்ததால் மன அழுத்தத்தில் இருந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.