மத்திய பிரதேசத்தில் பைசல் நிசார் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் “பாகிஸ்தான் வாழ்க” என்றும் “இந்தியா ஒழிக” என்றும் கோஷம் எழுப்பி இருந்தார். இது குறித்து சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அதன்பின் அவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரூ.50000 சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு மற்றொருவரின் உத்திரவாதத்தின் பெயரில் செல்ல வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 4வது செவ்வாய் கிழமைகளில் காவல் நிலையத்திற்கு சென்று, மூவர்ண தேசிய கொடியை வணங்கி 21 முறை “பாரத் மாதா கி ஜே” எனக்கோஷம் விட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாதத்தின் நான்காவது செவ்வாய்க்கிழமையாகும். இதனால் பைசல் கோர்ட்டின் உத்தரவை ஏற்று காவல் நிலையத்திற்கு சென்று, அங்கு அவர் முவர்ண கொடியை வணங்கி, 21 முறை “பாரத் மாதா கி ஜே” என்று முழங்கினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர், யாரும் நாட்டிற்கு எதிராக பேச வேண்டாம். நான் செய்த தவறை ஏற்றுக்கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற தவறை யாரும் செய்ய வேண்டாம் என்று மற்றவர்களிடமும் கூறுவேன் என்றார்.