
2023 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக கோப்பை வென்றது ஆஸ்திரேலியா அணி.
2023 உலக கோப்பை இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா வழக்கமாக தனது அதிரடியான இன்னிங்சை தொடங்கினார். ஆனால் மறுமுனையில் கில் 4 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தனர். முதல் விக்கெட்டை இழந்தாலும் ரோஹித் தனது வழக்கமான பாணியில் அதிரடியை வெளிப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் மேக்ஸ்வெல் வீசிய 10வது ஓவரில் தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரோஹித் சர்மா 31 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்..
இதையடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 4 ரன்னில் அவுட் ஆகி இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின் கே எல் ராகுல் – விராட் கோலி இருவரும் சேர்ந்து இன்னிங்ஸை பொறுப்புடன் எடுத்துச் சென்றனர். விராட் கோலி அரை சதம் கடந்தார். பின் கோலியும் பேட் கம்மின்ஸ் ஓவரில் பேட்டில் பட்டு ஸ்லீப் ஆகி ஸ்டெம்பில் பட்டு அவுட் ஆனார். கோலி 63 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார்.. பின் வந்த ஜடேஜா ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த பார்ட்னர்ஷிப்பும் நீண்ட நேரம் நீடிக்க வில்லை. ஜடேஜா 9 ரன்னில் வெளியேறினார்..
தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் உள்ளே வர மறுமுனையில் ராகுல் மட்டும் பொறுமையாக ஆடி அரைசதம் கடந்த நிலையில், அவரும் 107 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். பின்வந்த முகமது ஷமி 6 ரன்களும் பும்ரா ஒரு ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். கடைசி 5 ஓவர் இருந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் கடைசியில் அதிரடியை காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அனால், அவர் 28 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 48வது ஹேசில்வுட் பந்துவீச்சில் அடிக்க முயன்று கீப்பர் இங்கிலீஷ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
கடைசியில் முகமது சிராஜ் 9 ரன்கள் (நாட் அவுட்) , குல்தீப் யாதவ் (10 ரன்கள்) தட்டி தட்டி சிங்கிள் எடுக்க இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்தியா முதல் 2 விக்கெட் இழந்து 10 ஓவரில் 80 ரன்கள் சேர்த்தது. ஆனால் கடைசி 40 ஓவரில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் களமிறங்கினர். பும்ராவின் முதல் ஓவரில் வார்னர், ஹெட் பவுண்டரியுடன் அதிரடியாக தொடங்கினர். பின் முகமது ஷமி வீசிய 2வது ஓவரில் டேவிட் வார்னர் 7 ரன்னில் ஸ்லிப்பில் நின்ற கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.. தொடர்ந்து பும்ராவின் 5வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 15 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து பும்ராவின் 7வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணி 7 ஓவரில் 47 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து சற்று திணறியது. இந்திய அணி நன்றாக தொடங்கியது. ஆனால் அதன்பின் நிலைமை மாறியது. டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷேன் இருவரும் கைகோர்த்து பொறுமையாக ஆடி இன்னிங்சை எடுத்துச் சென்றனர். இவர்களை இந்திய பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. ஹெட் பொறுப்பாக ஆடி அரைசதமடித்த நிலையில், பின் அதிரடியாக சதமடித்தார். பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது. மெல்ல மெல்ல வெற்றி ஆஸ்திரேலியாவின் பக்கம் சென்றது. பின் லபுஷேனும் அரைசதம் அடித்தார். ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மைதானத்தில் அமைதியாக இருந்தனர். பின் ஆஸ்திரேலியா வெற்றியை நெருங்க, ஹெட் அவுட்டானார்.
டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் (15 பவுண்டரி, 4 சிக்ஸர்) 137 ரன்கள் சேர்த்தார். பின் மேக்ஸ்வெல் வந்து 2 ரன் எடுத்து வெற்றிபெற வைத்தார். லபுஷேன் 58 ரன்களுடனும் களத்தில் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 43 ஓவரில் 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 2003 உலக கோப்பையில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2023 உலக கோப்பையையும் வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது ஆஸ்திரேலியா. 6வது முறையாக ஒருநாள் உலக கோப்பையை தட்டி தூக்கி உள்ளது ஆஸ்திரேலியா. இந்தியா 3வது முறை கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.
Congratulations to Australia on a magnificent World Cup victory! Theirs was a commendable performance through the tournament, culminating in a splendid triumph. Compliments to Travis Head for his remarkable game today.
— Narendra Modi (@narendramodi) November 19, 2023
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடரபாக தனது ட்விட்டர் பக்கத்தில், உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்! போட்டியின் மூலம் அவர்களின் ஒரு பாராட்டுக்குரிய செயல்திறன் ஒரு அற்புதமான வெற்றியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இன்று அவரது சிறப்பான ஆட்டத்திற்காக டிராவிஸ் ஹெட்க்கு பாராட்டுக்கள் என ட்விட் போட்டுள்ளார்.
Dear Team India,
Your talent and determination through the World Cup was noteworthy. You've played with great spirit and brought immense pride to the nation.
We stand with you today and always.
— Narendra Modi (@narendramodi) November 19, 2023
அதே போல அன்புள்ள இந்திய அணி,உலகக் கோப்பையின் மூலம் உங்களின் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம் எனவும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.