குற்றவழக்குகள் இருக்கும் வேட்பாளர்கள் தங்களது வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியிடுவது மற்றும் அதை வெளியீடு செய்தது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கும் விதம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருப்பதாவது  “இந்திய தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் குற்றவழக்குகள் (நிலுவையில் உள்ளவை மற்றும் தண்டனை பெறப்பட்டவை) உள்ள வேட்பாளர்கள், குற்றவழக்குகள் உள்ள வேட்பாளர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.

வேட்பாளர்கள் தங்கள் குற்றவழக்குகள் குறித்த விவரங்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் உரிய படிவங்களில் விளம்பரம் செய்யவேண்டும். குற்றவழக்குகள் இருக்கும் வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் மற்றும் தங்களது அரசியல் கட்சியின் வலைதளங்களிலும் உரிய படிவங்களில் விளம்பரம் செய்தல் வேண்டும். மேற்படி விளம்பரங்கள் வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி தினத்திற்கு மறுநாள் முதல் வாக்குப்பதிவு முடிவுறுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்புவரை 3 முறை வெவ்வேறு நாட்களில் வெளியிடப்பட வேண்டும். மேற்காணும் பொருள் குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முழுமையான அறிவுரைகள் மற்றும் பதிப்புகள் வாரியான தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள், தொலைக்காட்சி அலை வரிசைகளின் பட்டியலை www.elections.tn.gov.in எனும் இணையதள முகவரியில் காணலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.