அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மார்ச் 13-ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது சிறந்த குறும்பட பிரிவில் இந்திய ஆவணப்படமான The Elephant Whisperers திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதேபோன்று ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடலுக்கும் ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவணப்படத்தை தயாரித்த குனீத் மோங்காவுக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதை அவர் பல பேட்டிகளில் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி சமீபத்திய பேட்டியில் ஆஸ்கார் விருது வென்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த முழு உலகமும் என் பிரார்த்தனைகளை கேட்டது. பின்னர் அந்த அதிசயம் நடந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு ஆஸ்கார் விருது வென்ற குனீத் மோங்கா அளவிற்கு மூச்சு திணறல் ஏற்படவில்லை. குனீத் மோங்காவுக்கு ஆஸ்கார் மேடையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அதிர்ச்சியில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்று கூறினார். மேலும் கீரவானியின் இந்த பேட்டி தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.