
பீகார் மாநிலதில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு நடந்த திருமண நிகழ்ச்சியில் நடந்த பரபரப்பான குற்றச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமண நிகழ்வில் ஒன்றான ஜெயமாலா விழா முடிந்து, மணமகன் மணமகளுடன் மேடையில் அமர்ந்திருந்தபோது, பண்டிட்ஜி மந்திரங்கள் ஓதி கொண்டிருந்த சமயத்தில் சில மர்ம நபர்கள் திருமண மண்டபத்திற்குள் புகுந்து, மணமகனை கடத்திச் சென்றனர்.
குற்றவாளிகள் கடத்துவதற்கு முன் மணமகளையும், அவரது குடும்பத்தினரையும் கொடூரமாக தாக்கினர், வீடு முழுவதும் சூறையாடப்பட்டது.மேலும் நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த தாக்குதலின் போது மணமகள் மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட பெண்கள் பலர் காயமடைந்தனர். விசாரணையில், திருமண விருந்தினர்களுக்காக ‘லாண்டா நாச்’ (நடனக் கலைக்குழு) விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இசை மற்றும் நடன நிகழ்ச்சியின் போது ஏதோ ஒரு சண்டை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, டஜன் கணக்கான லாண்டா நாச் குழுவினர் மணமகளின் வீட்டு வாசலில் தாக்குதலுக்கு இறங்கினர். பிறகு, மணமகனை அடித்து, வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தினர். இந்த சம்பவம், பைகுந்த்பூர் காவல் நிலையம் மற்றும் சாது சௌக் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருப்பினும், குற்றவாளிகள் ஏற்கனவே தப்பிச் சென்றுவிட்டனர். 24 மணி நேரம் கடந்தும், மணமகன் எங்கு உள்ளார் என்பதற்கான தகவல் இல்லை. இந்த நிகழ்வால் திருமண உற்சவம் துக்கவிழாவாக மாறியுள்ளது.
மணமகள் ஆழ்ந்த மனவேதனையில் அழுது கொண்டிருக்கிறார். கோபால்கஞ்ச் போலீசாருடன் சேர்ந்து, பரௌலி மற்றும் சிவான் மாவட்ட போலீசார் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், மணமகனை பாதுகாப்பாக மீட்டெடுப்போம் என்றும் எஸ்டிபிஓ பிரஞ்சல் திரிபாதி உறுதியளித்துள்ளார்.