கரூர் மாவட்டத்தில் உள்ள கணக்கப்பிள்ளையூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கபடி போட்டியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த கபடி அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காய்ச்சகாரன்பட்டி பகுதியில் வசித்த மாணிக்கம்(26) என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். அந்த அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது.

பின்னர் அடுத்த போட்டி வரும் வரை வீரர்கள் ஓய்வெடுக்க சென்றனர். அப்போது திடீரென தனக்கு நெஞ்சுவலிப்பதாக மாணிக்கம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக அவரை அய்யர்மலையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மாணிக்கத்தை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணிக்கத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக கணக்கப்பிள்ளையூரில் கபடி போட்டி நடத்திய விழா குழுவினர் முதல் பரிசுக்கான கோப்பை மற்றும் பரிசுத்தொகை 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மாணிக்கத்தின் குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளனர்.