இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் ஜப்பான். இந்த படம் கார்த்தியின் 25-வது படம். கதாபாத்திரங்களுக்கு காட்டிய அக்கறையை கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் படம் நன்றாக பேசப்பட்டிருக்கும். இரண்டாம் உலகப் போரில் கடுமையான அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகி விழுந்த நாடாக இருந்தாலும் ஜப்பான் அதிலிருந்து மீண்டு வந்தது. அது போல தான் விழுந்தாலும் எழ வேண்டும் என தனது அம்மா ஜப்பான் என பெயர் வைத்ததாக கார்த்தி ஒரு வசனம் பேசியுள்ளார்.

அதுபோல படத்தில் கார்த்தி பெயர் வாங்குகிறாரா என்பதுதான் கதை. படத்தில் கிளைமாக்சில் அம்மா சென்டிமென்ட் இருக்கிறது. அந்த சென்டிமென்ட் படத்தின் இடையில் வைத்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். கோயம்புத்தூரில் இருக்கும் பிரபல நகை கடையில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்படுகிறது. அதனை நகை திருடனான கார்த்தி தான் திருடி இருப்பார் என போலீசார் தனிப்படை மூலம் விசாரணை நடத்துகின்றனர்.

அதன்படி சுனில் தலைமையில் ஒரு படையும் விஜய் மில்டன் தலைமையில் மற்றொரு தனிப்படையும் கார்த்தியை தேடி செல்கின்றனர். இருவருமே கார்த்தியை நெருங்கிய பிறகு தான் அந்த திருட்டு பற்றிய பல விவரங்கள் தெரிய வருகிறது. தன் பெயரை வைத்து வேறு யாரோ அதனை செய்திருக்கிறார்கள் என கார்த்தியும் அந்த திருடனை தேடி போகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதி கதை.

கார்த்திக் ஜப்பான் படத்திற்காகவே தனி ஹேர் ஸ்டைல், ஆடை வடிவமைப்பு, பேச்சு என மாற்றி கொண்டார். அவரைப் பார்த்தால் நகை திருடன் என நம்பும் அளவிற்கு தோற்றம் இருக்கிறது. படம் முழுவதும் கார்த்தி வைத்து தான் நகர்கிறது. படத்தில் ஒரு கதாநாயகி வேண்டும் என்பதற்காக அனு இமானுவேலை சேர்த்துள்ளனர். அந்த கதாபாத்திரத்தை வைத்து ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ஆனால் கொஞ்ச நேரம் வந்து அதன் பிறகு அனு காணாமல் போய்விட்டார்.

ஜிவி பிரகாஷ் குமாரின் இசை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரவிவர்மன் ஒளிப்பதிவு பல்வேறு இடங்களில் காட்சிகளின் வேகத்திற்கு ஏற்ப பதிவு செய்திருக்கிறது. படம் ஆரம்பித்ததில் இருந்து இடைவெளி வரை எதையோ நோக்கி இலக்கு இல்லாமல் செல்வது போல இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு 200 கோடி நகைகள் திருட்டு, போலீஸ் விசாரணை, திருடன் என பரபரப்பாக செல்கிறது.