சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பின்னர் அஜித்குமாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார். மேலும் செய்தியாளர்களை சந்தித்து அவர் இதுகுறித்து கூறியதாவது, உயிரிழந்த அஜித்குமாரை கொடூரமான முறையில் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

அதற்கு மிக வன்மையான கண்டனத்தை விடுதலை சிறுத்தை கட்சி தெரிவித்துக் கொள்கிறது. அந்தக் கொலை குற்றத்திற்கு தொடர்புடைய 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது ஆறுதல் அளிக்கிறது. நானும் காவல் நிலைய விசாரணை எதிர்கொண்டவன் தான்.

போலீசாரின் விசாரணை போக்கு பற்றி எனக்கும் நன்றாக தெரியும். எல்லா ஆட்சியிலும் போலீஸ் விசாரணை முறை இப்படியாகத்தான் இருக்கிறது. எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் விசாரணை நடத்துவதே குற்றம். அதன் அடிப்படையில் விசாரணை என அழைத்துச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்துள்ளது அத்துமீறல் மட்டுமல்ல, அரச பயங்கரவாதம்.

இந்த வழக்கில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பது ஆறுதலை தருகிறது. மேலும் விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டிருப்பது முதலமைச்சரின் நேர்மையை உறுதிப்படுத்துகிறது.

காவல்துறையினர் ரவுடிகளை போல நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற 11 புலன் விசாரணை கட்டளைகளை எந்த காவல் நிலையத்திலும் பின்பற்றுவதில்லை. அஜித்குமாரின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.