
கோவையில் நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக-பாஜக கூட்டணி நல்ல முடிவு தான். இல்லையென்றால் இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்க மாட்டார். நான் பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு வந்துள்ளேன். பாஜகவில் இருந்து விலகியதற்கும், அதிமுகவில் இணைந்ததற்கு இடைவெளி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைய வாய்ப்பில்லை.
இந்த கட்சியில் அவர்கள் இருப்பதாலோ, விலகிப் போவதாலோ அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். திமுகவை வீழ்ந்த தான் இந்த கூட்டணி அமைந்துள்ளது, இதற்கு பெரிய வரலாறு இருக்கிறது, பல தேர்தல்களை சந்தித்து வெற்றிகளையும் கண்டுள்ளது. அதிமுகவின் மேம்பாடு வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல் மக்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள், தவிர வேறு எந்த சந்தேகமும் தேவையில்லை.
திமுக ஆட்சியில் விலைவாசி அதிகரித்துள்ளது. ஊதியம் உயரவில்லை, வேலைவாய்ப்பு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை, யாருடைய உரிமையும் பாதுகாக்கப்படவில்லை 4 ஆண்டுகள் முடிந்து விட்டது. இனிவரும் காலங்களில் அவர்களது செயல்பாடுகள் வெறும் மாயமாக மட்டுமே இருக்கும். வருகிற 2026 ஆம் ஆண்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அவர் கூறினார்.