
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் ஒரு தனியார் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் பாரம்பரிய தினத்தன்று டிரஸ் கோட்டை பின்பற்றவில்லை என்ற காரணத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இந்த பதிவில், கடந்த மார்ச் 28ஆம் தேதி மராட்டிய புத்தாண்டான “குடீ பாட்வா” கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்த தனியார் நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் இந்திய பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த புதிதாக சேர்ந்த ஊழியர் அந்த நிறுவனத்திற்கு புதிது என்பதால் வழக்கமாக அணியும் வெள்ளை ஷர்ட்டும், ஜீன்ஸும் அணிந்து வந்துள்ளார்.
இதனால் டிரஸ் கோட்டை பின்பற்றாமல் வந்ததற்காக HR அவருக்கு ரூபாய் 100 அபராதம் விதித்துள்ளதாகவும், தான் புதியதாக வேலைக்கு சேர்ந்துள்ளதால் புதிய உடை வாங்குவதற்கு கூட பணம் இல்லை எனவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பலரும் அந்த நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இதுபோன்று சாதாரண நிகழ்வுகளுக்கு கூட தனியார் நிறுவனங்கள் அபராதம் விதிப்பது நியாயமானதா? என சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளது.