
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி கிராமத்தில் காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதனால் காவல்துறையினர் விரைந்து சென்று கருத்தம்பட்டி விநாயகர் கோவிலின் அருகே சோதனை செய்தனர். அங்கு நான்கரை அடி உயரம் கொண்ட கஞ்சா செடி காணப்பட்டது.
பின்பு அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா செடிகளை தேனி மாவட்டம் தேவனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஃபீக் (41) என்பவர் வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதன் பின் வழக்கு பதிவு செய்து ரஃபிக்கை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து ரஃபிக்கிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊருக்குள்ளேயே கஞ்சா செடி வளர்ப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.