சினிமா உலகில் திறமையை விட சமூக வலைதள ஃபாலோவர்ஸ்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வியை நடிகர் ஷா ரா எழுப்பியுள்ளது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.ஜே-வாக அறிமுகமாகி ‘மீசைய முறுக்கு’, ‘கோமாளி’ போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராகப் பிரகாசித்த ஷா ரா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதிகாலை 4 மணி வரை தூக்கம் வராமல் தவிப்பதாகக் கூறிய அவர், “இப்போது பட வாய்ப்பு மற்றும் சம்பளம் பேசுபவர்கள் எல்லாம் இன்ஸ்டாவில் எவ்வளவு ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள் என்றுதான் கேட்கிறார்கள். என்னிடம் ஃபாலோவர்ஸை வளர்க்கும் அளவுக்குத் தகுதியோ, முக அழகோ, கவர்ச்சியோ இல்லையே” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

தியானம் செய்தாலும் இதிலிருந்து மீள வழி தெரியவில்லை எனப் புலம்பிய அவர், “ஃபாலோவர்ஸை ஏற்ற ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கள்” எனக் கெஞ்சும் தொனியில் பேசியிருப்பது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திறமையான ஒரு நடிகருக்கே இந்த நிலையா என இணையவாசிகள் பலரும் கமெண்ட்களில் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.