ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானிக்கு பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அவர் 2029 வரை அந்தத் தொடரில் விளையாட முடியாது. பிஎஸ்எல் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அழைத்தவுடன் அங்கிருந்து வெளியேறியதே இந்தத் தடைக்கு முக்கியக் காரணம். ஒப்பந்தத்தை மதிக்கத் தவறியது லீக்கின் கௌரவத்தைக் குலைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாகச் சாடியுள்ளது.
பிஎஸ்எல் தொடரில் சுமார் 40,000 டாலர் சம்பளம் பேசப்பட்ட நிலையில், ஐபிஎல்-லில் அதைவிட நான்கு மடங்கு அதிகமான 1,60,000 டாலர் தொகை முசரபானிக்குக் கிடைத்துள்ளது. பணத்திற்காக ஏற்கனவே கொடுத்த வாக்கை மீறிய வீரர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என பிஎஸ்எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோல் செய்த கார்பின் போஷ்க்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது முசரபானிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
