இந்தியாவில் தங்க முதலீட்டுக்கு மாற்றாக மத்திய ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை விற்பனை செய்கிறது. நடப்பு நிதி ஆண்டில் தங்க பத்திரங்கள் விற்பனை மார்ச் 6-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில் மார்ச் 10-ஆம் தேதியோடு விற்பனை நிறைவடைகிறது. இந்த தங்க பத்திரத்தை தபால் அலுவலகம், வங்கிகள் மற்றும் பங்குச்சந்தை வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். இந்த தங்க பத்திரங்களின் விலை ஒரு கிராம் ரூ. 5,611 ஆகும். அதன் பிறகு இந்த தங்க பத்திரங்களை டிஜிட்டல் முறையில் வாங்கினால் ஒரு கிராம் ரூ. 5561-க்கு கிடைக்கும். இந்த தங்க பத்திரங்களின் மூலம் உங்களுக்கு நிறைய பணம் சேமிப்பாகும். அதாவது புதிதாக தங்கம் வாங்கும் போது அதற்கு ஜிஎஸ்டி வரி போன்றவற்றை செலுத்த வேண்டும். ஆனால் தங்க பத்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய தேவை இல்லை.

இந்த தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகளில் முதிர்வடையும்போது அதற்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படாது. தங்கத்தை பாதுகாக்க வங்கி லாக்கரை பெரும்பாலானோர் பயன்படுத்துவர். ஆனால் தங்க பத்திரங்களை பாதுகாக்க இதுபோன்ற லாக்கர் எதுவும் தேவையில்லை. அது மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்கும். பொதுவாக தங்கம் வாங்கும்போது அதற்கு செய்கூலி மற்றும் சேதாரம் போன்றவைகள் விதிக்கப்படுகிறது. ஆனால் தங்க பத்திரங்களுக்கு செய்கூலி, சேதாரம் போன்றவைகள் கிடையாததால் உங்கள் பணம் மிச்சமாகும். மேலும் நேரடியாக தங்க நாணயங்கள் மற்றும் தங்கம் போன்றவற்றை வாங்குவதற்கு பதிலாக தங்க பத்திரத்தை வாங்கினால் உங்களுக்கு நிறைய பணம் சேமிப்பாகும்.