ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது..

ஆசிய கோப்பையின் முதல் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இந்நிலையில் இன்று 2வது சூப்பர் 4 போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று  கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷர்துல் தாகூருக்கு பதிலாக அக்சர் படேல் ஆடும் லெவனின் இடம் பிடித்துள்ளார். கேஎல் ராகுல், முகமது சிராஜ், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்றைய போட்டியிலும் ஆடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இப்போது இலங்கைக்கு எதிரான போட்டியிலும் அனைத்து வீரர்களிடமிருந்தும் இதையே எதிர்பார்க்கலாம். பாகிஸ்தானை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 4 புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி உள்ளது. இன்று இலங்கையை வீழ்த்தினால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

முன்னதாக இலங்கை அணி தனது முதல் சூப்பர் 4போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியுள்ளது. எனவே இன்றைய போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும். இன்றும் அதே கொழும்பு மைதானத்தில் நடைபெறுவதால் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், தற்போது மழை இல்லாமல் இருக்கிறது.

இந்திய அணி :

ரோஹித் சர்மா (கே), சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், இஷான் கிஷன் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா,  அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

இலங்கை அணி :

பதும்நிஷாங்கா, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் (wk), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானகா (c), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜிதா, மதீஷ பத்திரனா.