இந்தியர்கள் பொது இடங்களில் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற பரிந்துரைகளை வெளிநாட்டவர் ஒருவர் கூறியுள்ளார். கனடாவைச் சேர்ந்த “காலேப்” என்ற நபர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவில், இந்தியர்களின் சமூக நடத்தை குறித்து கவலை தெரிவித்து பேசுகிறார். இந்த வீடியோ பலரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் காலேப் கூறும் கருத்துகள் சாதாரணமாக இருந்தாலும், பல இந்தியர்களும் அதற்கு  பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த விடீயோவில், இந்தியர்கள் தினம்தோறும் 5 செயல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அவை,   “நன்றி சொல்லுங்கள், மன்னிப்பு  கேட்க பழகுங்கள், வரிசையில் குதிக்காதீர்கள், பணியாளர்களை கத்திப் பேசாதீர்கள், பிறரை சிரித்த முகத்துடன் பாருங்கள்” என 5 எளிய நாகரிகப் பழக்கங்களை இந்தியர்களிடம் கேட்டுக்கொள்கிறார். இது அனைத்தும் ஒவ்வொரு மனிதருக்கும் பொதுவான மரியாதையாகவே இருக்க வேண்டும் என்றார். சில சமயங்களில் இந்தியர்களிடம் இவை குறைவாகவே காணப்படுகிறது என அவர் வருத்தம் தெரிவித்தார்.

இந்த வீடியோ பார்த்த பலரும்  தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். “வெளிநாடுகளில் இருந்தபோது நாங்கள் நாகரிக பழக்கங்களை உடனே கற்றுக்கொண்டு வாழ்ந்தோம். ஆனால் நாட்டிற்கு திரும்பிய பிறகு அவை மறுபடியும் பின்வாங்கிக்கொண்டு விட்டன” என ஒருவர் குறிப்பிட்டார். சிலர், இந்தியாவின் நாகரிகக் குறைவுக்கு டெல்லி போன்ற நகரங்களில் காணப்படும் பரபரப்பான சூழ்நிலை, மக்கள் மிகுதி,  மன அழுத்தம் போன்றவை காரணமாக இருக்கலாம் எனவும் கூறினார்.

இதனிடையே, “இந்தியா என் வீட்டுதான்” எனக் காலேப் கூறியுள்ளார். “இந்தியர்களிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் அவர்களும் என் தாய்நாட்டைப் போல சில நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என அவர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பலரும், “நாகரிகத்தை வளர்ப்பது கல்வியை விட முக்கியம்” எனும் வரிகளுடன் காலேப்பின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.