இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையே இதற்கு முன் நடந்த டி20 போட்டிகளில் யார் கை ஓங்கி உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை 2023, கோலாகலமாகத் தொடங்கியது. உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை. இந்திய அணி தனது முதல் போட்டியில்   நாளை (பிப்ரவரி 12) பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன், இரு அணிகளின் புள்ளி விபரங்களை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

 இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேருக்கு நேர்  மோதிய ஆட்டங்கள் :

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியும் 13 முறை டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியாவின் சாதனை சிறப்பாக உள்ளது, 10 முறை இந்தியா வென்றுள்ளது, பாகிஸ்தான் 3 முறை மட்டுமே வென்றுள்ளது. கடந்த 5 போட்டிகளில் இந்தியா 4 முறை வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பையிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி 6-ல் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதனிடையே இந்திய தொடக்க வீரரும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா, பயிற்சி ஆட்டத்தின் போது இடது விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் மீளாததால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டியில் ஸ்மிருதி மந்தனா பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மந்தனா டி20 உலகக் கோப்பையில் சிறப்பான பார்மில் இருந்து வருகிறார்.2021 டி20 உலகக் கோப்பையில், இந்திய அணியில் அதிக ரன் குவித்தவர். அவர் 5 ஆட்டங்களில் 235 ரன்கள் எடுத்தார்.

அதேபோல், 2022 டி20 உலகக் கோப்பையிலும் மந்தனா தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அந்த தொடரில் அவர் 6 இன்னிங்ஸ்களில் 38 ரன்கள் சராசரியிலும் 144 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 228 ரன்கள் எடுத்தார்.விரைவாக ரன்களை எடுக்கும் திறமையால், தொடக்க மற்றும் மிடில் ஓவர்களில் மிடில் ஆர்டரில் இந்தியாவின் மிகப்பெரிய பலமாக திகழ்ந்தார்.எனவே, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் மந்தனா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும்.

பெண்கள் டி20 உலகக் கோப்பை 2023க்கான மகளிர் இந்திய அணி : 

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே.

பெண்கள் டி20 உலகக் கோப்பை 2023 க்கான பாகிஸ்தான் அணி :

பிஸ்மா மரூஃப் (கேப்டன்), அய்மென் அன்வர், அலியா ரியாஸ், ஆயிஷா நசீம், சதாப் ஷமாஸ், பாத்திமா சனா, ஜவேரியா கான், முனீபா அலி, நஷ்ரா சந்து, நிடா தார், ஒமைமா சொஹைல், சாடியா இக்பால், சித்ரா அமின், சித்ரா நவாஸ், துபா ஹசன்.