அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது..

அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை க்ளீன் ஸ்வீப் செய்ய வேண்டும் என்ற டீம் இந்தியா ஆசைப்பட்டது. ஆனால் கடைசி 3வது டி20 மழையால் டாஸ் இன்றி ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது. கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவுக்கு இது முதல் சர்வதேச தொடர் வெற்றியாகும். மழை ஓயாததால் இரு அணி கேப்டன்களுடன் நடுவர்கள் விவாதித்து போட்டியை ரத்து செய்தனர். கடந்த ஆண்டு இரு அணிகள் மோதிய டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

ஆசிய கோப்பை :

அயர்லாந்துக்கு எதிரான தொடர் முடிவடைந்த நிலையில், ஆசிய கோப்பையில் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது. மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா மற்றும் சில வீரர்கள் அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை. பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பயிற்சி முகாமில் அவர்கள் ஏற்கனவே தயாராகி வருகின்றனர். அயர்லாந்துடன் தொடரில் விளையாடிய பும்ரா, பிரசித், திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் டப்ளினில் இருந்து நேரடியாக பெங்களூரு சென்றடைவார்கள். பும்ரா, பிரசித் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஆசிய கோப்பையின் பிரதான அணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சன் பேக்அப் வீரராக உள்ளார். அவர் ஆசியக் கோப்பைக்காக இலங்கைக்கு அணியுடன் வருவார்.

புதன்கிழமை அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 தொடங்குவதற்கு முன், இந்திய அணி வீரர்கள் சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் செயல்முறையை உற்சாகத்துடன் பார்த்தனர். சந்திரயான் 3 தரையிறங்குவதை பும்ரா, அணி வீரர்கள், சக பணியாளர்கள் என ஒட்டுமொத்த குழுவும் ஒன்றாகப் பார்த்தனர். தரையிறங்கும் வெற்றியை இந்திய வீரர்கள் கொண்டாடினர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.