நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து நேற்று முன்தினம் 63.5 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய அணியில்  அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார் மார்னஸ் லாபுசாக்னே. ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களும், அலெக்ஸ் கேரி 36 ரன்களும் எடுத்தனர்.அதே நேரத்தில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த 4 பேரைத் தவிர ஒரு கங்காரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்கை எட்ட முடியவில்லை. இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முகமது ஷமி மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கி ஆடினர். இதில் ராகுல் 20 (71) ரன்னில் டாட் மர்பி சுழலில் அவுட் ஆன போதிலும், ரோஹித் சர்மா அரைசதம் கடந்த நிலையில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிந்தது. ரோஹித் சர்மா 56 ரன்களுடனும் , அஸ்வின் ரன் எடுக்காமல் களத்தில் இருந்தனர். முதல் நாள் முடிவில் இந்தியா 24 ஓவரில் 77/1 என இருந்தது.

தொடர்ந்து நேற்று 2வது நாள் ஆட்டம் தொடங்க, அஸ்வின் 23 ரன்னில் அவுட்டானார். அதனைத் தொடர்ந்து  வந்த புஜாரா 7, விராட் கோலி 12,  சூர்யகுமார் யாதவ் 8 என மிடில் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதையடுத்து ஜடேஜாவுடன் கைகோர்த்து ஆடிய கேப்டன் ரோகித் சர்மா தனி ஒருவராக சிறப்பாக ஆடி சதம் விளாசி அவுட் ஆனார். ரோஹித் 212 பந்துகளில் (15 பவுண்டரி, 2 சிக்ஸர்) 120 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்ரீகர் பாரத் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்..

இதையடுத்து ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா 170 பந்துகளை சந்தித்து 66 ரன்கள் எடுத்தார். அவருக்கு அக்சர் படேல் (102 பந்துகளில் 52 நாட் அவுட்) உறுதுணையாக இருந்தார்.

இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. மூன்றாவது நாளான இன்று ஜடஜாவும், அக்சர் படேலும் இன்னிங்க்ஸை தொடங்கிய நிலையில், ஜடேஜா 70 (185) ரன்களில் மர்பி சுழலில் போல்ட் ஆனார். அதனைத் தொடர்ந்து அக்சர் படேல் – முகமது ஷமி ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதன் பின் ஷமி 37 ரன்களில் அவுட் ஆனார். பின் கடைசி விக்கெட்டாக அக்சர் படேல் 84 (174) ரன்களில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 139.3 ஓவரில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை வகித்து இருந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக போட்டியிலேயே டாட் மர்பி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் கம்மின்ஸ் 2 விக்கெட்டும், லியோன் ஒரு விக்கெட் எடுத்தனர்.

இந்நிலையில் 223 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மீண்டும் முதல் இன்னிங்க்ஸை விட வேகமாக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியே சென்றனர். ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் துவக்க வீரர் கவாஜா(5) டேவிட் வார்னர்(10), மாட் ரென்ஷா (2), பீட்டர் (6), அலெக்ஸ் கேரி (10)  என அனைவருமே சிக்கி வெளியேறினர். அதேபோல மார்னஸ் லாபுசாக்னே(17) பேட் கம்மின்ஸ்(1) ஆகிய இருவரையும் ஜடேஜா வெளியேற்றினார்.  மேலும் ஷமி வேகத்தில் லியோன் (8) மற்றும் போலான்ட் (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 32.3 ஓவரில் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது..

இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்களும், ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டும் அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.