இந்தியாவில் மீன் உற்பத்தி அதிகரித்து வருவதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி மும்பையில் சாகர் பரிக்கிராமா திட்டத்தின் 5-வது கட்ட யாத்திரை தொடங்கி நேற்று கோவாவில் முடிவடைந்தது. இந்த நிகழ்வில் மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் மீன் உற்பத்தி 2021-22 ஆம் நிதி ஆண்டில் 162.48 லட்சம் டன்னை எட்டி சாதனை படைத்துள்ளது.

மீனில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பல்வேறு விதமான சத்துக்கள் இருக்கிறது. இந்த மீன்வளத்துறை 2.8 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் போன்றவற்றை வழங்குகிறது. கடந்த 75 வருடங்களில் மீன்வளத்துறை 22 மடங்கு மீன் உற்பத்தியை அதிகரித்து லாபம் குவிக்கும் வர்த்தக துறையாக மாறி வருகிறது. மேலும் உலக அளவில் மீன் உற்பத்தியில் 8 சதவீதத்தை பூர்த்தி செய்து மூன்றாவது மீன் உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று கூறினார்.