கடந்த எட்டு ஆண்டுகளை பொருத்தவரை இந்தியாவில் பால் உற்பத்தி 51% அதிகரித்திருப்பதாகவும் உலக அளவில் பால் உற்பத்தியின் இந்தியா 24 விழுக்காடு வரை பங்களிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவையில் உறுப்பினர்களில் ஒருவர் இந்தியா உலக பால் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக உருவாகி இருப்பது குறித்தும் 2014 முதல் நடப்பாண்டு வரை மொத்த பால் உற்பத்தியின் அளவு தொடர்பாகவும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய மீன் வள மற்றும் பால் துறை இணை அமைச்சர் புருஷோத்தமரூபாலா உலக அளவில் முன்னணி நாடாக இந்தியா விளங்கி வருவதாகவும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடப்பு நிதியாண்டு வரை 51% பால் உற்பத்தி இந்தியாவில் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் நிதி ஆண்டில் உலகளாவிய மொத்த பால் உற்பத்தி அளவு 800.33 மில்லியன் டன்னாக இருந்த நிலையில் அதில் இந்தியாவின் பங்கு 18.28 விழுக்காடு அதாவது 146.31மில்லியன் டன் ஆகும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் நிதி ஆண்டில் உலகளாவிய மொத்த பால் உற்பத்தி 918.16 மில்லியன் டன் என்ற நிலையில் அதில் இந்தியாவின் பங்கு 24.08 விழுக்காடு எனவும் அதாவது உலகளாவிய மொத்த பால் உற்பத்தியில் 221.06 மில்லியன் டன் பால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது எனவும் மத்திய பால் வளத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.