
யுவன் ராஜ் நேத்ரன் ஒரு குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகம் ஆகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் பெரும்பாலும் எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தார். தமிழ் சின்னத்திரை திரையில் மருதாணி, சிங்க பெண்ணே, ரஞ்சிதமே, பாவம் கணேசன், பொன்னி, பாக்கியலட்சுமி, மன்னன் மகள், ராஜா மகள், மகாலட்சுமி போன்ற தொடர்களில் பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவிலும் சில துணை வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் விஜய் டிவி மற்றும் சன் டிவியில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் போன்றவற்றில் பங்கேற்று உள்ளார். இவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நேத்ரனின் மனைவியும், சின்னத்திரை நடிகையுமான தீபா தனது கணவர் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதில் அவர் கூறியதாவது, நேத்ரனுக்கு முதலில் இதயத்தில் பிரச்சனை இருந்தது அதற்கு ஹோமியோபதி மூலம் மருந்து எடுத்து வந்தார்.
இது தவிர நான்கு ஆண்டுகளாகவே அவருக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவருக்கு ஹீமோ சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஏற்கனவே வயிறு வலி காரணமாக வயிற்றில் ஆபரேஷன் நடந்து பின்னர் அந்த தையல் பிரிந்து விட்டது. ஆரம்பத்திலேயே வயிற்று வலிக்கான காரணங்களை தெளிவாக ஸ்கேன் எடுத்து பார்த்திருந்தால் நேத்திரனை காப்பாற்றி இருக்கலாம் என கண்ணீருடன் பேட்டியில் கூறியுள்ளார்.