சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அணி சில பாதுகாப்பு காரணங்களால் அங்கு செல்ல மறுத்தது. இதையடுத்து இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், ஐசிசி தலைமைச் செயல அதிகாரி ஜெஃப் அலர்டிஸ் தனது பதவியில் இருந்து விலக போவதாக கூறியுள்ளார். இவர் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த பொறுப்பில் நியமிக்கபட்டார். இவர் பதவியில் இருந்து விலகப் போவதாக கூறியிருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை அதிகாரியாக செயல்பட்டது எனக்கு மிகவும் பெருமை. என்னால் முடிந்தவரை நான் இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். அவரது ராஜினாமா முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது சாம்பியன்ஸ் டிராபிக் தொடர்பு மைதானங்கள் தயார் செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதமே ஐசிசி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை மைதானங்கள் சரியாக தயாராகவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது. இதுதான் அவர் பதவி விலக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.