ஆஸ்திரேலியாவின் 6வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த டிராவிஸ் ஹெட், நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரை வீழ்த்தி விருதை வென்றார். நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர்களாக டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், முகமது ஷமி ஆகிய மூவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ஹெட் இந்த விருதை வென்றுள்ளார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பான சதம் அடித்து அணியை எளிதான வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் குவித்து இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வீரர் அரையிறுதியிலும் சிறப்பாக பேட்டிங் செய்தார். அரையிறுதியிலும் ஆட்ட நாயகனாக ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல மகளிர் கிரிக்கெட்டில் வங்கதேசத்தின் இளம் சுழற்பந்து வீச்சாளர் நஹிதா அக்தர் நவம்பர் மாதத்திற்கான சிறந்த பெண் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். வரலாற்றில் முதன்முறையாக இந்த விருதை வென்ற முதல் வங்கதேச பெண் வீராங்கனை என்ற அரிய சாதனையையும் இவர் பெற்றுள்ளார். நஹிடா தனது சக வீராங்கனைஃபர்ஹானா ஹக் மற்றும் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சடியா இக்பால் ஆகியோரை முறியடித்து விருதை வென்றார்.