பெரம்பூரில் உள்ள புழல் எம் எம் பாளையத்தில் வரலட்சுமி (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மகா ஜுவல்லர்ஸில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நகை வாங்குவது, நகைகளை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவருக்கு கடையின் உரிமையாளரான சரவணகுமார் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வரலட்சுமி தன்னிடம் இருந்த 45 பவுன் நகைகளை புதிதாக மாற்றுவதற்காக சரவணகுமாரிடம் கொடுத்துள்ளார். இதற்காக ரூ.8 லட்சம் பணமும் கொடுத்துள்ளார். அதன் பிறகு சரவணகுமார் நகைகளை மாற்றி தருவதாக கூறி காலம் தாழ்த்தியுள்ளார். ஒரு கட்டத்தில் நகைகளை உருக்கும் போது சேதாரம் ஆகிவிட்டது என்றும், அதனால் எனக்கு அதிக நஷ்டம் ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

எனவே கொஞ்சம் பொறுமையாக இருங்கள் எப்படியாவது உங்கள் நகைகளை திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று கூறினார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக அவரது நகை கடையில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கடையை மூடிவிட்டார். இருப்பினும் வரலட்சுமி தொடர்ந்து சரவணகுமாரிடம் நகைகளை கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அன்று சரவணகுமார் மீது வரலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சரவணகுமாரை அழைத்து விசாரணை நடத்தியதில், வாங்கிய நகைகளை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறிவந்துள்ளார். ஆனால் பேசியபடி அவர் நகைகளை தராததால் காவல்துறையினர் நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.