
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அம்பர்நாத் பகுதியில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் மொழி தொடர்பான வாக்குவாதம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பேங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் பணிபுரிந்து வரும் வங்கி மேலாளர் மராத்திய மொழியில் பதில் அளிக்காததால் எம்.என்.எஸ் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கு வங்கி மேலாளர், “நாங்கள் அரசு ஊழியர்கள் எங்கும் பணி மாற்றம் நடக்கலாம். நாளை தமிழ்நாட்டுக்கு போனாலும் தமிழ் கற்க வேண்டியிருக்கும். மொழி கற்க நேரம் தேவைப்படுகிறது” என பதில் அளித்துள்ளார். இதற்கு எம்.என்.எஸ் உறுப்பினர்கள் “3 ஆண்டுகளாக இங்கு பணிபுரிகிறீர்கள். இன்னும் எவ்வளவு காலம் மராத்தி கற்க நேரம் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
अंबरनाथ येथील ” बँक ऑफ महाराष्ट्र ”
मधील परप्रांतीय मॅनेजर ने मराठी बोलण्यास नकार दिला व उलट मुजोरीची भाषा केली महाराष्ट्र सैनिकांनी त्याला सडेतोड उत्तर दिले.#Marathi #MNSAdhikrut pic.twitter.com/nVZQWZqtaG— MNS Adhikrut – मनसे अधिकृत (@mnsadhikrut) April 2, 2025
இதனை அடுத்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி மகாராஷ்டிரா மாநில வங்கிகளில் மராத்தி மொழியில் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வங்கியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கியில் மராத்திய மொழியில் பேச முயன்ற போது, வங்கி மேலாளர் மரியாதை அற்ற முறையில் பதில் அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை அடுத்து எம்.என்.எஸ் குழுவின் முக்கிய நிர்வாகிகள் ஆகிய குணால் போயிர், ஸ்வப்னில் பாகேல் மற்றும் தனஞ்சை குரவ் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தி வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மராத்தி மொழிக்கு மரியாதை இல்லாத இடங்களில் எங்கள் கை, கால்கள் பேச தயாராக இருக்கின்றன என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.