
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் என்பது விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம், தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை ஏர்டெல் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதில் இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ் எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்பனம் செய்வதற்கான அங்கீகாரங்களை பெறுவதற்கு உட்படுத்தப்பட்டது என்று தெரிவித்திருந்தது.
மேலும் ஏர்டெல்லின் சில்லறை விற்பனை கடைகளில், ஸ்டார்லிங்கை வழங்குவதற்கு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்திருந்தது. இதற்கு முன்னதாக இந்தியாவில் செயல்படுத்துவதற்கான செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்கவில்லை. இதற்கிடையில் கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக ஏர்டெல்லுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.