
பீகார் மாநிலத்திலுள்ள பாட்னா அருகேயுள்ள குஸ்ருபூர் பகுதியில் சமோசா தொடர்பான சின்னத் தகராறு ஒருவரின் உயிரை பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 16ஆம் தேதி மாலை, ஷியாம் பாபு கோபின் மகனான ரவி குமார் என்ற இளைஞர், அதே பகுதியில் உள்ள பாலேஷ்வர் ராய் நடத்தும் கடையில் சமோசா வாங்க சென்றார்.
சமோசா குளிர்ச்சியாக இருந்ததாக கூறி, அதன் தரத்தை விமர்சித்த அவருடன், கடைக்காரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் மோசமாக மாறிய நிலையில், கடைக்காரர் மற்றும் அவரது இரு நண்பர்கள் இணைந்து ரவியை கடுமையாக தாக்கினர். இதில் அவரது தலையிலும் உடலின் பல பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
தாக்குதலுக்குப் பிறகு, ரவிக்கு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, அதே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், அடுத்த நாளே அவருக்கு தலையலி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மே 18 அன்று பிற்பகலில் அவர் சிகிச்சையின் போது உயிரிழந்தார்.
இதனையடுத்து, ரவியின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அவரது உடலை சாலையில் வைத்து நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள் மக்களை சமாதானப்படுத்த முயன்றனர்.
மேலும், காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் என்றும், குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
அதன்பின் ரவியின் மரணத்திற்கு காரணமான கடைக்காரரையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்து, அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.