இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய கேப்டன்கள் ஆன ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். தற்போது அடுத்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஆட உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய சூழலில் பிசிசிஐ உள்ளது. அந்த கேப்டன் பதவிக்கு தகுதியான வீரர்களாக சுப்மன்கில்,  ரிஷப் பண்ட் ஆகியோர் நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் பலரும் பும்ராவை  கேப்டனாக அறிவிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இந்தச் சூழலில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக கே.எல். ராகுலை நியமிக்கலாம் என முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “கே.எல். ராகுல் டெஸ்ட் போட்டிகளில் டாப் ஆர்டரில் உள்ள முக்கியமான வீரர். இவர் வெளிநாட்டு போட்டிகளில் விளையாட தகுதியானவர்.

மேலும் வெளிநாட்டில் நடந்த போட்டிகளில் பெரும்பாலான ரன்கள் மற்றும் சதங்களை அடித்து விளாசியுள்ளார். எனவே அவரது திறமை குறித்து எந்த ஒரு கேள்வியும் இல்லை. மிகவும் இளமையான வீரர். தற்போது அவருக்கு 31 அல்லது 32 வயது இருக்கும் என நினைக்கிறேன். எனவே அவரால் 2025 முதல் 2027 வரை உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை முழுமையாக தொடர முடியும்.

பி.சி.சி.ஐ நீண்ட கால கேப்டனை தேர்வு செய்ய விரும்பி சுப்மன் கில்லை  தற்போது நியமிப்பது தவறான முடிவாகும். ஏனெனில் அவர் மிகவும் இளமையான வீரர். அவர் கிரிக்கெட் விளையாட்டில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவருக்கு முன்னே நிறைய உள்ளன. ஒருமுறை தென்னாப்பிரிக்கா போட்டியில் விராட் கோலி கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து விலகியபோது கே.எல். ராகுல் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தினார்.

மேலும் தொடக்க வீரராகவும் களமிறங்கினார். எனவே பி.சி.சி.ஐ அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி முழுமைக்கும் ஒரு நீண்ட கால கேப்டனாக கே.எல் ராகுலை சிந்திக்க வேண்டும் என நான்  விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்