சென்னையில் உள்ள அண்ணா டவர் பூங்கா மிகவும் பிரபலமானது. கடந்த 1960-ம் ஆண்டு அண்ணா டவர் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த டவர் பூங்கா 100 அடி உயரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு போன்று காட்சி அளிக்கும். இங்கிருந்து பார்த்தால் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்தும் மிக அழகாக தெரியும். ஆனால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள்  அரங்கேறியதால் கடந்த 2011-ம் ஆண்டு அண்ணா டவர் பூங்காவை பூட்டிவிட்டனர். இந்நிலையில் தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் மீண்டும் அண்ணா டவர் பூங்காவை புதுப்பிக்கும் வேளையில் இறங்கியது.

முன்பை விட பாதுகாப்பான வசதிகள் செய்யப்படுகிறது. அதன்படி நெருக்கமான கிரில் கம்பிகள், வழுக்காத டைல்ஸ், சுவர்களில் கிறுக்காத அளவுக்கு பாரம்பரியமான ஓவியங்கள் போன்றவைகள் அண்ணா டவர் பூங்காவில் அமையப்பெறுகிறது. இந்த பூங்காவை விரைவில் அமைச்சர் கே.என் நேரு திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது. அண்ணா டவர் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு கட்டணம் வசூலிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. மேலும் 12 வருடங்களுக்கு பிறகு அண்ணா டவர் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருப்பது சென்னை வாசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.