இந்தியாவில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸை தொடர்ந்து தற்போது H2N2 என்ற இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் கர்நாடகா மற்றும் ஹரியானாவில் 2 பேர் பலியான நிலையில், தமிழ்நாட்டிலும் ஒரு இளைஞர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெங்களூரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் விடுமுறையில் தன்னுடைய நண்பர்களுடன்  கோவாவுக்கு சென்று விட்டு சொந்த ஊரான மலைக்கோட்டைக்கு வந்துள்ளார். அப்போது திடீரென வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகளால் இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் இன்ஃப்ளுயன்சா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 534 பேருக்கு இன்ஃப்ளுயன்சா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்று 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இருமல், காய்ச்சல், குளிர், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, தசைகள் மற்றும் உடல் வலி, வயிற்றுப்போக்கு, தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல், உணவை விழுங்கும்போது சிரமம், சுவாசிப்பதில் சிரமம், அசோகரியம், தொடர் காய்ச்சல், மார்பு வலி மற்றும் தொண்டை வலி போன்றவைகள் இருந்தால் அவர்களுக்கு இன்ஃப்ளுயன்சா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்கள் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ள வேண்டும்.