தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, தமிழ் மொழி உயர்வுக்கு எதிராக ஆளுநர் அர்த்தம் இன்றி பேசுவதாக டி.ஆர் பாலு கண்டனம்  தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பாஜக அரசின் ஊதுகோலாக ஆளுநர் ரவி செயல்படுவதாக டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள்.  தமிழகம் என்று சொல்லுங்கள் என்றும்,  வேதங்களை பார்த்து திருக்குறள் எழுதப்பட்டதாகவும் ஆளுநர் பேசி வருகின்றார். எந்த ஆதாரமும் இன்றி பச்சைப்பொய்களை சொல்வதுடன் திராவிடம் என்ற கருத்தியல் பற்றி அவதூறு பொழிவதாக ஆளுநருக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

மருது சகோதரர்கள் நினைவுநாள் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பச்சை பொய்களை பேசிய வருவதாக DMK குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.  திராவிடம் என்ற சொல் நிலம், இனம், மொழியை குறிக்கிறது. இன்று இந்தியா முழுவதும் திராவிட மாடல் பற்றி பேசப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகவும்,  அரசியல் சாசனத்திற்கு துரோகம் செய்யும் வகையில் ஆளுநர் பேசி வருவதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராக சுற்றிக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார். அரசியல்வாதி போல் ஆளுநர்  செயல்படக்கூடாது என்ற மரபுக்கு மாறாக ஆர்எஸ்எஸ் பிரதிநிதி போல் ஆளுநர் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். பாஜகவின் ஊதுக்குழலாக பச்சை பொய்களை மட்டும் பேசும் ஆளுநர் ரவியின் வயிற்றெரிச்சலுக்கு காரணம் திராவிடம் என்ற சொல் தான்; வயிற்றெரிச்சல் காரணமாகவே,  திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல்லை ஆளுநர் விமர்சித்துள்ளார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் வரலாறு கிடைக்கவில்லை  என்றும் தியாகிகளை தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது என்றும் ஆளுநர் பொய் பேசுகிறார்.   புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் ,வீரன அழகுமுத்துக்கோன் என எண்ணற்ற தியாகிகளை அரசு போற்றுகிறது. தமிழ்நாட்டில் பிஹெச்டி ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்ட தலைப்புகளில் திராவிடம் பற்றிய தலைப்புகள் ஆளுநருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது எனவும் டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.