சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை திருமுல்லைவாயில் பகுதியில் இத்ரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் இத்ரிஸ் சொந்தமாக வீடு கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டி கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் கடந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளார். இந்த மனுவை பரிசீலனை செய்யாமல் கிடப்பில் போட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் மின்வாரிய அதிகாரியான பாளையம் என்பவர் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் மின் இணைப்பு வழங்க பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார். இது தொடர்பாக இத்ரிஸ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இத்ரிஸ் மின்வாரிய அதிகாரியிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பாளையத்தை கையும் களவுமாக பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.