தமிழகத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 2.35 கோடி வீட்டு கேஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் பயனாளிகளின் உண்மை தன்மை சரிபார்ப்பு பணி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அவர்கள் கேஸ் ஏஜென்சிக்கு சென்று விரல் ரேகை, விழி ரேகை அல்லது முகப்பதிவு வாயிலாக வாடிக்கையாளரின் உண்மை தன்மை விவரம் உறுதி செய்யப்படுகிறது. இதனை நேரில் சென்று செய்ய முடியாதவர்களுக்கு, எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் போன் அல்லது சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களின் மொபைல் போன் வாயிலாக பதிவு செய்யலாம்.

இதுவரை மொத்த வாடிக்கையாளர்களில் பாதி பேரு கூட பதிவு செய்யவில்லை. இந்நிலையில் உண்மை சரிபார்ப்பு பணியை வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சக அதிகாரி கூறியதாவது, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் உள்ள கேஸ் சிலிண்டர் பயனாளிகளில் 60% பேர் விரல் ரேகை பதிவு செய்துள்ளனர். ஆனால் சென்னையில் 25% பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 50% பேர் கூட ஒத்துழைக்கவில்லை, எனவே சிறப்பு முகாம்கள் வாயிலாக வாடிக்கையாளரின் உண்மை சரிபார்ப்பு பணியை மார்ச் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.