தமிழகத்தின் மையமாக திருச்சி அமைந்துள்ளதால் அரசியல் கட்சிகள் திருச்சியில் மாநாடு நடத்தவே பெரும்பாலும் விரும்புகின்றனர். திருச்சி என்று திருப்பு முனை என்று தான் அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள். திருச்சியில் பெரும்பாலும் ஜி கார்னர் மைதானத்தில் மாநாடுகள் நடைபெறும் நிலையில் அண்ணா முதல் ஜெயலலிதா வரை அங்கு மாநாடுகள் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று ஓ பன்னீர்செல்வம் திருச்சியில் மாநாடு நடத்த இருக்கிறார். இந்த ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த  1949-ம் ஆண்டு அண்ணா திமுக கட்சியை தொடங்கிய போது அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை திருச்சியில் தான் நடத்தினார். கடந்த 1967-ஆம் ஆண்டு முதல் முறையாக திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அண்ணாவின் மறைவுக்கு பிறகு கலைஞர் கருணாநிதி கடந்த 1970-ம் ஆண்டு திருச்சியில் மாநாடு நடத்தினார். இதனையடுத்து 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதிமுக கட்சியை தொடங்கிய எம்ஜிஆரும் தன் கட்சியின் முதல் மாநாட்டை திருச்சியில் தான் நடத்தினார்.

இதனையடுத்து கடந்த 1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வராக எம்ஜிஆர் ஆட்சி கட்டிலில் அமர்ந்தார். இதைத்தொடர்ந்து 3 முறை எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அதன் பிறகு கலைஞர் கருணாநிதி தலைமையில் திருச்சியில் மாநாடு நடத்தப்பட்டது. இருப்பினும் அது பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால் கடந்த 1995-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டுக்குப் பிறகு 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கலைஞர் கருணாநிதி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார். கடந்த 2001-ம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜி கார்னர் மைதானத்தில் மறைந்த ஜெயலலிதா பொதுக்கூட்டம் நடத்தினார். அதன் பிறகு நடந்த பொது தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இப்படி முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் திருப்புமுனையை ஏற்படுத்திய திருச்சி ஓ. பன்னீர்செல்வம் அரசியல் வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.