தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று மாலை முப்பெரும் விழா மாநாடு நடத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்த போதிலும் மனம் தளராமல் அதிமுகவை மீண்டும் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஓபிஎஸ் தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் தான் தற்போது திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நடத்துகிறார். இந்த மாநாடு ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்று திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அதிமுக அலுவலகம் போன்று ஓபிஎஸ் மேடை அமைத்துள்ளார்.

தற்போது அதிமுகவின் பொது செயலாளராக தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்ததோடு அவருக்கு இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் அதிமுகவினர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக கட்சியின் கொடி மற்றும் சின்னம் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது எனவும், மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி வருகிறார்கள். ஆனால் ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் திருச்சி மாநாட்டில் கண்டிப்பாக அதிமுக கொடியை பயன்படுத்துவோம். இதற்காக எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை என அண்மையில் கூறியிருந்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி வசம் அதிமுக சென்ற நிலையிலும், தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறும் ஓபிஎஸ் இன்று மாலை நடத்திருக்கும் முப்பெரும் விழா மாநாடு அரசியல் அரங்கில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.