பெங்களூரு மத நாயக்கனஹல்லி பகுதியில் இருக்கும் குடியிருப்பில் கன்னட திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான குரு பிரசாத் வசித்து வந்தார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி குரு பிரசாத் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர் தற்கொலை செய்து பல நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. கடுமையான நிதி நெருக்கடியால் தவித்த குரு பிரசாத் தனது படங்களை முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளார்.
பணம் கொடுக்காமல் பொருட்கள் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில் குரு பிரசாத் இயக்கிய ரங்கநாயகாபுரம் தோல்வியை சந்தித்தது. இதனால் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. குரு பிரசாத்தின் முதல் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்தார். இதனால் குரு பிரசாத் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி என்ன செய்கிறார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.