தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் இதனை முன்னிட்டு நாளை பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்த பூமி பூஜையில் கலந்து கொள்ள திரளான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூமி பூஜை விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்வதால் நிச்சயம் அவரை காண்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடுவார்கள்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ள நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்கூட்டியே விழாவில் கலந்து கொள்ளும் வாகன உரிமையாளர்கள் தங்களுடைய ஆர்சி புக்கை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி வாகனங்களுக்கான ஆர்சி புக்கை நிர்வாகிகள் பலரும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வருகிறார்கள்.
இதன் காரணமாக காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கலாம் என்பதால் இப்படி ஒரு உத்தரவினை விஜய் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் முன்னதாக விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையாக மாறிய நிலையில் எக்ஸ் பக்கத்தில் இருந்து பொட்டு வைத்த புகைப்படத்தை நீக்கினார். ஆனால் தற்போது அனைத்துக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக பூமி பூஜையை விழாவினை நடத்துகிறார் விஜய். அதோடு இந்த விழாவில் அவர் கலந்து கொள்வது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறி உள்ளது.