தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது விஜய் 26 தீர்மானங்களை நிறைவேற்றினார். குறிப்பாக திமுக அரசுக்கும் மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார். அதன்படி ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்டாமல் சமூக நீதிப் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருகிறது. பிற மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்போது தமிழக அரசு மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பிக்க முயல்கிறது.
மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் கட்டண உயர்வு என்று பொதுமக்களின் மீது வரி சுமையை மேலும் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் அதிகரிப்பு, போதை பொருள் அதிகரிப்பு போன்ற நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாததால் அமைதி பூங்கா பகத் திகழ்ந்த தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. மகளிர் உரிமைத்தொகை மற்றும் பரிசுத்தொகை என்று அறிவித்துவிட்டு ஒருபுறம் மது கடைகள் மூலமாக வருமானத்தை பெருக்கி வருகிறது.
மது கடைகளை கால நிர்ணயம் செய்து மூட வேண்டும். மேலும் தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றிய தகைசால் தமிழர்களுக்கு விருது வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு பரந்தூர் விமான நிலையம், கன்னியாகுமரி அணுக்கணிம சுரங்கம், என்எல்சி நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.