பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவிற்கு வருகை புரிகிறார். முதலில் திருவனந்தபுரம்- காசர்கோடு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். அதன் பிறகு இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த வாட்டர் மெட்ரோ சேவையை கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. படகு சேவையை மெட்ரோ ரயில் தரத்தில் அளிப்பதை தான் வாட்டர் மெட்ரோ என்று அழைக்கிறார்கள்.

முற்றிலும் குளிரூட்டப்பட்ட படகில் முழுவதும் கண்ணாடியால் மூடப்பட்டு எலக்ட்ரிக் படகுகளாக இயக்கப்படும். இந்த வாட்டர் மெட்ரோ கொச்சி துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10 சிறிய தீவு பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் சுமார் 1137 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களை போன்று ஒவ்வொரு தீவிலும் 38 முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைபிரிட் படகுகள் இயக்கப்படுகிறது. இந்த படகுகளை கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. தற்போது 78 ஹைபிரிட் படகுகள் வரை தயாரிக்கப்பட்ட தயார் நிலையில் இருக்கிறது. இந்த படகுகளில் நவீன அம்சம் கொண்ட லித்தியம் டைட்டானைட் ஸ்பைனல் பேட்டரிகள் பயன்படுத்தப்படும் நிலையில் ஒரு படகில் சுமார் 100 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த படகு போக்குவரத்தை சுற்றுலாவுக்கு மட்டுமின்றி உள்ளூர் மக்கள் தினசரி போக்குவரத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு இருக்கிறது. இந்த வாட்டர் மெட்ரோ சேவை தினசரி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை பொது மக்களுக்கு வழங்கப்படும்.

குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாய் முதல் அதிகபட்சமாக 40 ரூபாய் வரை வசூலிக்கப்படும். இந்த வாட்டர் மெட்ரோ சேவையை கொச்சி1 என்ற மொபைல் ஆப் மூலம் பயன்படுத்தலாம். அதன்பிறகு தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர சேவைக்கு சிறப்பு சலுகை பாஸ் பயன்படுத்தி கொள்ளலாம். முதல் கட்டமாக 15 நிமிடங்களுக்கு ஒரு முறை வாட்டர் மெட்ரோ ரயில் சேவை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும். மேலும் இந்த வாட்டர் மெட்ரோ படகு சேவை மொத்தம் 75 கிலோமீட்டர் தூரத்தை இணைக்கும் வகையில் 15 வழிதடத்தில் வழங்கப்பட இருக்கிறது.