சான் பிரான்சிஸ்கோ குயிடோ பல்கலைக்கழகம், ஈக்வடாரின் தேசிய பல்லுயிர் நிறுவனம் மற்றும் ஈக்வடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஏழு புதிய இனங்களை கண்டறிந்துள்ளனர். அதில் ஒரு உயிரினத்திற்கு தான் டைட்டானிக் பட நாயகனின் பெயர் சூட்டியுள்ளனர். ஈக்வடாரின் எல் ஓகோ மாகாணத்தில் மேற்கு பகுதியில் உள்ள மலைப் பாங்கான வனப்பகுதியில் புதிதாக கண்டறியப்பட்ட தவளை இனத்திற்கு தான் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த அரிய வகையான தவளை இனம் கருமையான புள்ளிகளால் மூடப்பட்ட பழுப்பு நிற தோல் கொண்டவை. இவை கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 1200 மீட்டர் உயரத்தில் வாழ்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தத் தவளைக்கு டைட்டானிக் படத்தின் உலகப் புகழ்பெற்ற ஆஸ்கார் நாயகனான “லியோனார்டோ டீகாப்ரியோ” வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தவளைக்கு ” ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோய்”பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவர். சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள், அது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக 1998 ஆம் ஆண்டு லியோனார்டோ அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். இந்த நிறுவனத்தின் மூலம் ஈக்வடாரின் தேசிய பூங்கா எண்ணைத் தோண்டும் திட்டத்தை  எதிர்த்து குரல் கொடுத்தார்.

எனவே அவரது சுற்றுச்சூழல் பாதுகாக்கும் சேவையை கௌரவிக்கும் வகையில் தவளைக்கு இந்த பெயர் சூட்டப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னதாக சென்ற ஆண்டு இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அரிய வகை பாம்பினத்திற்கும் இவரது பெயரை சூட்டப்பட்டது. இந்தப் பாம்பின் பெயர் “ஆங்குகுலஸ் டிகாப்ரியோய்”என்பது குறிப்பிடத்தக்கதாகும்.