மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டாள்புரம் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு மாசி வீதியில் டி.எம் கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கீழ்த்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், இரண்டாவது தளத்தில் குடோனும் அமைந்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையில் விற்பனை நடந்து கொண்டிருந்தபோது முதல் தளத்திலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்ததும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர். இந்நிலையில் உரிமையாளரின் மருமகன் மோதிலால் முதல் தளத்தில் இருப்பவர்களை எச்சரிக்கை செய்யவும் அவர்களை வெளியேற்றவும் விரைந்து சென்றார். அப்போது மின்சார வயர்கள் தீப்பிடித்து எரிவதாக கூச்சலிட்டார்.

அதற்குள் முதல் தளத்தில் புகைமூட்டம் அதிகமாகி எதிரே நிற்பவர் கூட கண்ணுக்கு தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்தது. இதனால் வெளியே வர முடியாமல் மோதிலால் உள்ளே சிக்கிக்கொண்டார். இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மோதிலாலை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.