மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் ஊபர் ஆட்டோ ஓட்டுனர்களை, உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் மிரட்டும் காட்சியை பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர ஊபர் ஆட்டோ ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.

அந்த ஆட்டோவை வழி நிறுத்தி உள்ளூர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் பயணத்தை ரத்து செய்ய கோரி வற்புறுத்தியுள்ளார். மேலும் ஆட்டோவை ஓரம்கட்டி நிறுத்துமாறும் ஊபர் ஆட்டோ ஓட்டுனரிடம் கூறினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதேபோன்று ராம்வாடி மெட்ரோ ஸ்டேஷனில் ஒரு ஊபர் ஆட்டோ ஓட்டுனரை பல உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் சேர்ந்து  மிரட்டும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஊபர் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய கட்டண முறையின் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பயணிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற கட்டண முறை வேறுபாடுகளால் உள்ளூர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், ஊபர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே போட்டி ஏற்படுகிறது என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.