தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்குகள் என்பது அதிகரித்து வருகிறது. ஆளுநர் ரவி பேசும் ஒவ்வொரு கருத்துகளும் தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் நிலையில் தமிழக அரசியலில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதால் தொடர்ந்து கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு கண்டனங்களை தெரிவித்து வந்தது.

ஆளுநர் ஒரு ஒப்புதலுக்கு தீர்மானம் வழங்காமல் கிடப்பில் போட்டிருந்தால் அந்த தீர்மானத்தை நிராகரித்துவிட்டார் என்று அர்த்தம் என ஆளுநர் ரவி பேசியது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆளுநர் தொடர்பாக சட்டசபையில் எதுவும் விவாதிக்கக்கூடாது என்ற தீர்மானத்தை நீக்கி சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஆளுநர் ரவி ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி இருந்தாலும் அவர் ஸ்டெர்லைட் போராட்டம் மற்றும் சனாதனம் பற்றி பேசிய கருத்துகள் ஆகியவற்றிற்கு வருத்தம் தெரிவிக்காததால் கண்டிப்பாக ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 12-ஆம் தேதி திட்டமிட்டபடி சைதாப்பேட்டை தேரடி திடலில் ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் ஸ்டெர்லைட் மற்றும் சனாதனம் போன்ற கருத்துக்களுக்கு ஆளுநர் வருத்தம் தெரிவிக்காததை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.