பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் சேவையில் கட்டணம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டில் எழுந்த  நிலையில் டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகிறதா என்ற ஒரு கேள்வியும் எழுந்தது. ஆனால் தற்போது ஏப்ரல் மாதத்துக்கான முழு டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது. டிக்கெட் விலை என்னதான் அதிகமாக இருந்தாலும் தற்போது விடுமுறை தினம் என்பதால் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது. வந்தே பாரத் ரயில் சேவை மூலம் சென்னையில் இருந்து கோவைக்கு 5 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்று விடலாம். இந்த ரயில் சேவை வாரத்தில் புதன்கிழமை மட்டும் இயங்காது. இந்த ரயில் சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

கோவையில் இருந்து முதலில் காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் 11:50 மணி அளவில் சென்னையை வந்தடையும். இதேப்போன்று சென்னையில் இருந்து மறு மார்க்கத்தில் 2:15 மணிக்கு புறப்படும் ரயில் 8:15 மணியளவில் கோவையை சென்றடையும். இந்நிலையில் தெற்கு ரயில்வே அளித்த தகவலின்படி தற்போது 8 பெட்டிகள் உள்ள வந்தே பாரத் ரயில் சேவையில் ஏசி சேர் கோரில் 350 டிக்கெட்டுகளும், எக்ஸிக்யூட்டிவ் வகுப்பில் 35 டிக்கெட்டுகளும் இருக்கிறது. இதில் ஏசி சேர் கோரில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 1365 ஆகவும், எக்ஸிக்யூட்டிவ் சேர் கோரில் ரூ. 2485 ஆகவும் டிக்கெட் கட்டணம் இருக்கிறது. மேலும் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட்டுகள் விற்றதால் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக உயர்த்த வேண்டும் எனவும், டிக்கெட் விலையை சற்று குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.