ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் காலை முதல் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, பண பட்டுவாடா என பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதோடு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு வைக்கப்படும் விரல் மை எண்ணெய் தேய்த்தாலே அழிவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர். இது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சிவகுமார் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை எந்த ஒரு பிரச்சனையும் நடைபெறவில்லை. தேர்தலில் வைக்கப்படும் மை அழிவதாக வரும் புகார்களில் எந்த உண்மையையும் கிடையாது. நானும் வாக்களித்து விட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். மை எல்லாம் அழியவில்லை. அது நன்றாக தான் இருக்கிறது. அதன் பிறகு பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தும் கண்டறியப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். மேலும் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு வேண்டிய அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.